வியாழன், 7 ஜூலை, 2022

திருவெள்ளறை- புண்டரீகாட்சன்,செண்பகவல்லி தாயார் கோயில்.

 திருவெள்ளறை

    திருச்சி மாவட்டம், துறையூர் அருகே அமைந்துள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில். 

மூலவர்

       புண்டரீகாட்சன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.

       தயார் - செண்பகவல்லி தாயார் எனும் பங்கயச் செல்விக்கு தனி சன்னதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்.

பெயர் காரணம் -  இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது.

தீர்த்தம் - திருக்கோயிலில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று 7 தீர்த்தங்கள் கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளது.

விமானம் - விமலாக்ருதி விமானம்.- கோயில் கோபுரம் பாதி சிதைந்து பாதிமட்டுமே எஞ்சி இருக்கின்றது.

கோயிலின் சிறப்பம்சம்

   எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு உத்தராயண வாசல் (வடக்கு வாசல்), தட்சிணாய வாசல் (தெற்கு வாசல்) என இரு வாசல்கள் உண்டு.

Ø  தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சினாய வாசல் வழியாக பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Ø  சிபிச்சக்கரவர்த்திக்கு பெருமாள் ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) காட்சி அளித்ததாக தல புராணம் கூறுகிறது. இதனால் ஸ்வேதபுரி நட்சத்திரம் எனவும் பெயர் வந்தது.

Ø  ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய, சந்திரர்கள், ஆதிசேசன் முதலியோர் மனித வடிவில் வந்து பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ததாக் கூறப்படுகிறது.

இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என மூன்று நாச்சியார்களுக்கு  மூன்று  திவ்ய தேசங்கள் பெருமை.

மங்களாசாசனம் -  இந்த திருக்கோயிலை பெரியாழ்வார் பாடியுள்ளார்.!

திருவெள்ளறை தல பெருமை

     பாவ  புண்ணியங்களுக்கு  ஏற்ப ஆன்மா பிறப்பதும் மறைவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறப்பெடுத்த ஜீவன் மறைந்ததும் வைகுந்த வாசலை நோக்கிச் செல்கிறது. அப்போது அங்கு அந்த ஆன்மாவின் பாவ புண்ணியக் கணக்குகள் விசாரிக்கப்படும். அநேக புண்ணியங்களைச் செய்த ஆன்மா வைகுந்தத்தில் அனுமதிக்கப்பட்டு பரமபதத்தை அடையும். பாவம் செய்த ஆன்மாக்கள் நரகத்துக்கு அனுப்பப்படும் என்பது நம்பிக்கை.

பாவங்கள் செய்த ஆன்மா என்றாலும், பரம்பொருளின் கருணையால், இறுதி வாய்ப்பாக இந்த கேள்வி கேட்கப்படும். 'பூலோக வைகுந்தமாம் திருவெள்ளறையின் திருக்கோபுரத்தை  தொலைவிலாவது தரிசித்த புண்ணியம் உமக்குண்டா!' ஆம் என்று அந்த ஆன்மா கூறினால், அந்த ஆன்மா உடனே வைகுந்தத்தில் அனுமதிக்கப்படுமாம்.

நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தியை அளிக்கும் திருவெள்ளறை திருக்கோயில் திருவரங்கத்துக்கு இணையான பெருமை கொண்டது என்பார்கள் பெரியோர்கள். சோழ நாட்டு திவ்ய தேசங்களில் இது நான்காவது திருத்தலம். திருமகள் க்ஷேத்திரம், ஸ்வேதகிரி, நீலிகா வனம், வராகபுரி, உத்தம க்ஷேத்திரம், ஹித க்ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது திருவெள்ளறை. சிபி மன்னன் காலத்தில் திருமாலோடு 3700 வைஷ்ணவ பெரியோர்கள் வாழ்ந்த தலமிது.

     மாலவனின் பக்தனான சிபி மன்னன் இங்கு வந்திருந்த போது அவனுக்கு வராஹ மூர்த்தி அருட்காட்சி தந்து ஆட்கொண்டார். அப்போது மார்க்கண்டேய மகரிஷியின் ஆணைப்படி இங்கு திருமாலுக்கு பிரமாண்ட ஆலயம் எழுப்பி வழிபட்டான் சிபி. திருமகள் தவமிருந்து பெருமாளை அடைந்த தலமும் இது. இங்குள்ள பெருமாள் ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் எனப்படுகிறார். ஆம், அழகிய தாமரைக் கண்களைக் கொண்டவர் இவர்.

கருவறையில் நின்ற திருக் கோலத்தில், கிழக்குத் திருமுக மண்டலமாக காட்சி தருகிறார் ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள். பெருமாளுக்கு அருகே சூரிய, சந்திரா் சாமரம் வீச, கருடனும் ஆதிசேஷனும் நின்ற திருக்கோலத்தில் பெருமாளை வணங்கிக் கொண்டிருக்கின்றனா். பெருமாளின் திருவடியில் மார்க்கண்டேயா் தவம் செய்யும் கோலத்தில் அமா்ந்துள்ளார்.

திருவெள்ளறை தலத் தீர்த்தமான பூங்கிணறு (ஸ்வஸ்திக் கிணறு)

   திருவெள்ளறை தலத் தீர்த்தமான பூங்கிணற்றில் திருமகள் பங்கஜவல்லி (பங்கயச்செல்வி) தவமிருந்த வேளையில் திருமால் ஆலிலை துயின்ற ஆதிபிரான் கோலத்தில் காட்சி அளித்து திருமகளுக்கு அருள் செய்தார். எனவே ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கிருஷ்ணனின் அம்சமானவர் என்றும் கூறப்படுகிறது. பங்கயச் செல்வி, பரிமளதேவி, செண்பகவல்லி என்றெல்லாம் போற்றப்படும் தாயாருக்கே இங்கு எல்லா முதல் மரியாதையும் என்பது இங்கு விசேஷத் தகவல். பெருமாள் வழங்கிய வரத்தின்படி இன்றும் எல்லா உற்சவத்திலும் தாயாரே முன்னே செல்வார். திருமால் அவரைப் பின்தொடர்ந்து செல்வார்.

    இத்தலத்து பெருமாளை பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் 24 பாசுரங்களில் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள். கூட நிகமாந்த மகாதேசிகரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்த தலமும் கூட இது. ஸ்ரீராமாநுஜரின் சீடரான எங்களாழ்வார் பிறந்த தலமும் திருவெள்ளறையே. ராமாநுஜர் இங்கு வந்தபோது தாயாருக்கு நைவேத்தியம்  செய்த பிரசாதத்தை  ராமாநுஜருக்கு அளித்து பசி போக்கினாராம். அதனால் இன்றும் தாயாருக்கு அமுது செய்யப்பட்ட பிரசாதமே ராமாநுஜருக்கு படைக்கப்படுகிறது.

     இங்குள்ள ஸ்வஸ்திக் வடிவ திருக்குளமும் உத்தராயன - தட்சிணாயன வாசல்களும் சிறப்பானவை. பெருமாள் சந்நிதிக்கு இரு வாசல்கள் படியேறிச் செல்லும் வகையில் உள்ளன. ஆன்மாக்கள் உய்வு பெற, தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் சென்று வழிபடும் முறை இன்றும் உள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற 'ஸ்வஸ்திக் குளம்’ என்ற சக்கரக்குளத்தின் சிறப்பு, ஒரு துறையில் குளிப்பவா்களை எதிர் துறையில் குளிப்பவா்கள் பார்க்க முடியாது என்பதே. ஸ்வஸ்திக் வடிவ நான்கு புறத்திலும் 52 படிகள்உள்ளன. இக்குளத்தினை `நாலு மூலைக்கேணி, மாற்பிடுகு பெருங் கிணறு' என்றும் அழைப்பர்.

ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், ஆதிசேஷன், குபேரன் ஆகியோர் இன்றும் அன்றாடம் இங்குள்ள சுவாமியை வழிபடுவதாக ஐதீகம். திருமகள் தங்கி இருந்த பூங்கிணறு, திவ்ய தீா்த்தம், வராஹ தீா்த்தம், குசஹஸ்தி தீா்த்தம், சந்திர புஷ்கரணி தீா்த்தம், பத்ம தீா்த்தம், புஷ்கல தீா்த்தம், மணிகா்ணிகா என 8 தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

கல்வெட்டு தொடங்கி காலம்

     ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த ஆலயத்தில் பல்லவமன்னன்  தந்திவா்மன்  காலத்து  (805-ம் ஆண்டு) கல்வெட்டு தொடங்கி விஜயநகர அரசர்கள் காலத்து கல்வெட்டுகள் வரை இந்த ஆலயத்தின் பெருமைகளைக் கூறுகின்றன. வரலாற்றுப் பெருமைகளும் புராண மகிமைகளை கொண்ட இந்த திருவெள்ளரைத் திருத்தலம் திருமகளின் பரிபூரண கடாட்சத்தைக் கொண்டுள்ளது.

    அதேபோல் கருணைக் கடலான செந்தாமரைக் கண்ணனாம் புண்டரீகாட்சப் பெருமானின் அருளையும் கொண்டுள்ளது. வாய்ப்பு கிடைப்பவர்கள் திருவெள்ளரைத் திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். செய்த வினைகள் யாவும் அழிந்து எளிதில் பெருமானின் கருணைக்கு ஆளாகலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

    ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்வியப் பிரபந்த  திருக்கோயில்கள் வரிசையில், திருச்சி மாவட்டத்தில் திகழும்  திருவெள்ளறை பங்கயக்கண்ணன் (புண்டரீகாட்சப் பெருமாள்)  திருக்கோயில் குறிப்பிடத்தக்கதாகும். வைணவர் களுக்குக் கோயில் என்றால் திருவரங்கம்தான். அந்த திருவரங்கத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் மணச்சநல்லூர் சாலையில் சென்றால் திருவெள்ளறையை அடையலாம். பங்கயச் செல்வியுடன் பங்கயக்கண்ணன் என்ற திருநாமத்தோடு இங்கு திருமால் அருட்கோலம் கொண்டு விளங்குகின்றார். பெரியாழ்வார், திருமங்கை யாழ்வார் போன்றவர்களால் போற்றித் துதிக்கப்பெற்ற பெருமையுடையது கோயில்.

     மேல் நிலைகள் கட்டி முடிக்கப்பெறாத  நிலையில் பெரிய ராஜகோபுரம், மிகப்பிரமாண்டமான திருமதில், திருக்கோபுரங்கள், மணிமண்டபங்கள், திருச்சந்நதிகள், பலிபீடம், கொடிமரம் என்ற ஒரு பெருங்கோயிலுக்குரிய அத்தனை கட்டுமானங்களுடனும் இத்திருக்கோயில் விளங்குகின்றது.இத்திருக்கோயிலில்  பல்லவமன்னன் தந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி.805) தொடங்கி, மூன்றாம் நந்திவர்மன், சோழப் பேரரசர்கள், விஜய நகர அரசர்கள், நாயக்கர்கள் எனப்பல மரபு மன்னர்கள் காலத்தில் வெட்டு விக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் இத்திருக்கோயில் பெற்ற ஆக்கங்கள் விவரிக்கப்பெற்றுள்ளன. மதுராந்தக உத்தமசோழனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டுச் சாசனம் (கி.பி.978ல் பொறிக்கப்பெற்றது) திருவெள்ளறை ஸ்ரீவிண்ணகரத்தை ‘‘பெரிய ஸ்ரீ கோயில்’’ என்றே குறிப்பிடுகிறது. பெருங்கோயில் என்னும் வகைப்பாட்டுள் இக்கோயில் குறிக்கப்பெறுகின்றது.

      இத்தலத்தில் திகழும் திருமால் திருமூர்த் தங்களான செந்தாமரைக் கண்ணாழ்வார், கம்பிக்காதாழ்வார், திருவயோத்தி ஆழ்வார் (ராமபிரான்) என்று கல்வெட்டுகள் குறிப்பிடுவதோடு ஸ்ரீகிருஷ்ணன், ருக்மிணி பிராட்டியார் பற்றிய செய்திகளையும் விவரிக்கின்றன. ‘ராஜராஜ வளநாட்டு பாச்சில் கூற்றத்தில் திகழும் திருவெள்ளறை’ என்ற குறிப்பும் காணப்பெறுகிறது.

    கட்டுமானக் கோயிலாகத் திகழும் இவ்வாலயத்தின் ஒரு பகுதியில் பாறையில் குடைவிக்கப்பெற்ற குடைவரைக் கோயிலொன்றும் காணப்பெறுகின்றது. பல்லவர் காலத்து இக்குடைவரைக் கோயிலின் நான்கு தூண்களில் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் சாசனங்கள் கல்வெட்டுக்களாக இடம் பெற்றுள்ளன. அழகிய இக்கற்கோயிலின் தென்புற மதிலை அடுத்து பல்லவப் பேரரசன் தந்திவர்மன் காலத்தின் அமைக்கப்பெற்ற ‘மாற்பிடுகு பெருங்கிணறு’என்ற ஸ்வஸ்திக வடிவ பெருங்கிணறொன்று இன்றும் பேரெழிலோடு வரலாற்றுச் செய்திகளையும் ஆன்மிக அறிவுரை கூறும் அற்புதப்பாடல் கல்வெட்டொன்றினை சுமந்தவாறும் காணப்பெறுகின்றது. மொட்டைக் கோபுரமாக விளங்கும் பெருந்திருவாயில் கடந்து கோயிலுக்குள் நுழையும்போது இரண்டாம் கோபுர வாயிலுக்கு முன் ஸ்ரீபலிபீடம் காட்சி அளிக்கும். அப்பீடத்தின் முன் திகழும் பெரிய திருவடியை வணங்கிய பின்பு, நம் உள்ளத்து மாசுகள் அனைத்தையும் களைந்து நம் உண்மை அன்பை அந்த பங்கயக்கண்ணனுக்கு பலிபீடத்தில் இட்டு அர்ப்பணித்தவாறு இரண்டாம் கோபுரம் கடந்து உள்ளே நுழைவோமாயின் அங்கு ‘‘நாழி கேட்டான்’’ திருவாயில் என்ற திருநிலையுடன் கூடிய வாயில் திகழும். இது மூலவருக்கு நேர் எதிரே உள்ள திருவாயிலாகும்.

     அவ்வாயிலில் நுழையும்போதே அதன் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலை வாசல்களை அங்கு ஒரு நிமிடம் நின்றவாறு பார்ப்போமாயின் இரண்டு கல்வெட்டு பாடல்கள் பொறிக்கப் பெற்றிருப்பதைக் காணலாம். அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்த கோயில் திருப்பணி புரிந்தோர், அந்தப் பகுதியின் மேல் சுண்ணாம்பு பூசாமல் தவிர்த்திருக்கிறார்கள். அந்த இரண்டு பாடல்களும் கி.பி.1216ல் மதுரையில் முடிசூடி பாண்டிய நாட்டை மீட்டெடுத்த சுந்தரபாண்டியன் பொறித்தவை.

    ஒரு பாடல் அப்பெருவீரன் காவிரி நாட்டை எப்படி தனதாக்கிக் கொண்டான் என்று கூறுகிறது. அதன் எதிர்ப்புறம் உள்ள பாடலோ பின் வருமாறு உள்ளது:

                ‘‘வெறியார் தவளத் தொடை செயமாறன் வெகுண்டதொன்றும்

                  அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப்

                  பறியாத தூணில்லை கண்ணன் செல்பட்டினப் பாலைக்கன்று

                  நெறியால் விருந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே’’

இப்பாடலின் பொருளாவது, கோபம் மிகுந்த மாலை அணிந்த மாறவர்மனாகிய சுந்தரபாண்டியன், சோழனுக்குரிய காவிரிநாட்டின் மீது படைஎடுத்து அங்கிருந்த எல்லா மண்டபங்களையும் இடித்துத் தள்ளினான். ஆனால், அக்காவிரி நாட்டில் அவன் அழிக்காமல் விட்டது 16 தூண்களை உடைய ஒரு மண்டபம். அது முற்காலத்தில் (அக்கல்வெட்டு எழுதப்பெறுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) கரிகாற்பெருவளத்தான் என்னும் (கரிகாற்சோழன்) சோழமன்னனின் புகழை உருத்திரங்கண்ணனார் என்ற சங்ககாலப் புலவர் பட்டினப்பாலை என்ற நூலாகப் பாடியதற்காக அவ்வேந்தன் பரிசாக அளித்தது என்று கூறுகின்றது.

     வரலாற்றுச் சிறப்பு மிகுந்த  இக்கல்வெட்டுப் பாடலை அவன் பொறிப்பதற்கு முன் நிகழ்ந்தவற்றை இங்கு நாம் அறிதல் அவசியமானதாகும். பாண்டிய நாட்டை தங்கள் ஆளுகையின் கீழ்த் தொடர்ந்து நிலைபெறச் செய்தவர்கள் சோழர்கள். இவர்களில் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1178-1218) வீரபாண்டியன் என்பான், தன் நாட்டை மீட்பதற்கு மூன்று முறை சோழனோடு போரிட்டான். மூன்றாம் போரில் பங்கேற்ற குலோத்துங்க சோழன் பாண்டியனைத் தோற்கடித்ததோடு அவன் அரண்மனையைத் தரை மட்டமாக்கி, கழுதையைக் கொண்டு ஏர் உழுது அங்கு வரகினைத் தெளித்தான். அரசியல் மண்டபங்கள் அனைத்தையும் அழித்தான். பாண்டி நாட்டு பண்டாரத் திலிருந்து கைப்பற்றிய பொன்னையும், நவமணி களையும் பிற பொருட்களையும் ஆலவாய் சொக்கநாத பெருமானுக்கும் பிற பாண்டி நாட்டுக் கோயில் களுக்கும், சோழ நாட்டுக் கோயில்களுக்கும் பரிசாக அளித்தான் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.

     குலோத்துங்க சோழன் கி.பி.1218ம் ஆண்டில் இறந்தான். கி.பி.1216ல் பாண்டிய நாட்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற இளைஞன் பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்றான். தன் நாட்டிற்கு நிகழ்ந்த அவமானத்தைச் சோழ நாட்டிற்குச் செய்வேன் என்று சபதம் செய்தான். குலோத் துங்கனின் மறைவுக்குப் பின்பு மூன்றாம் ராஜராஜசோழன் பட்டமேறினான். அவனை வென்ற சுந்தரபாண்டியன் தஞ்சையையும், உறையூரையும் தீயிட்டுக் கொளுத்தினான். சோழ மன்னர்களின் அரண்மனைகளையும் அரசியல் கேந்திரங்களையும் தரை மட்டமாக இடித்தான்.

      கழுதை கொண்டு ஏர் உழுது கவடியாகிய வரகைத் தெளித்தான். அவன் சோழர் அரண்மனையிலிருந்து கைப்பற்றிய  பெருஞ்செல்வங்களை சோழநாட்டுத் தில்லைக் கோயிலுக்கும் பிற கோயில்களுக்கும் அளித்தான். அப்போதுதான் அவன் சோழநாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 16 கால் மண்டபம் ஒன்று இருப்பதைக் கண்டான். அது கரிகால் சோழனைப் புகழ்ந்து பட்டினப்பாலை என்ற தமிழ் நூல் பாடியதற்காக அளித்தது என்பதை அறிந்தான். சோழமரபு மன்னர்கள் தனக்குப் பகைமையு டையவர்களாக இருந்தபோதும் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் தமிழ் பாடியதற்காக அளித்தது என்ற காரணத்தால் அதனை மட்டும் விட்டு வைத்தேன் என்று திருவெள்ளறைக் கல்வெட்டில் கூறியுள்ளான். அப்பெரு வேந்தனின் மாண்புக்கு எதனை ஈடாகச் சொல்லமுடியும்!

      திருவெள்ளறை பெருமாள் கோயிலின் தென்புறத்தில் திகழும் ஸ்வஸ்திக வடிவ கிணற்றுக்கு நான்கு புறங்களிலும் படிக்கட்டுகள் உண்டு. நீர் இருக்கும் இடம்வரை செல்லலாம். ஒரு துறையில் இருப்பவர் மற்ற மூன்று துறைகளில் இருப்பவர் களைப் பார்க்க இயலாத வகையில் கட்டுமானம் அமைந்துள்ளது. கிணற்று நீர் தூய்மையானதும் பவித்ரமானதும் என்பதைக் காட்ட நான்கு படித்துறைகளிலும் தெய்வ உருவங்களை எழில் மிகுந்த சிற்பங்களாகப் படைத்துள்ளனர். ஸ்வஸ்திக கிணற்றின் கைப்பிடிச் சுவரில் பல்லவ வேந்தன் தந்திவர்மன் காலத்து கல்வெட்டுச் சாசனங்கங்கள் காணப்பெறுகின்றன. கி.பி. 805ம் ஆண்டு ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்ற தலைவன் தன் அரசன் நந்திவர்மனின் பட்டப்பெயரான ‘‘மாற்பிடுகு’’ என்ற பெயரில் ‘‘மாற்பிடுகு பெருங்கிணறு’’ என இதனைத் தோற்றுவித்த செய்தி ஒரு சாசனத்தில் கூறப்பெற்றுள்ளது.

     ஆலம்பாக்கத்து கம்பன் அரையனே அதே கிணற்றின் பக்கச் சுவரில் ஒரு அற்புதமான கல்வெட்டுப் பாடலைப் பொறித்துச் சென்றுள்ளான். அப்பாடலின் பொருளாவது: ‘‘நேற்று ஒரு வனைக் கண்டேன். இன்றோ அவனைக் காணமுடியவில்லை; இறந்துவிட்டான். அத்தகைய நிலையாமையுடைய இவ்வுலகத்தில் அனைத்தின் பாலும் ஆசைகொண்டு (காதல் கொண்டு) நிற்காதீர்கள். அன்றொருநாள் நம்மை இறைவன் படைத்தானே அந்த பிறந்தநாளின் நட்சத்திரம் சாதகம், பலன் இவற்றைப் பார்த்துக்கொண்டு மனம் வருத்தப்பட்டு நைந்து போகாதீர்கள். வயது முதிர்ந்து கையில் கோலூன்றி நம் உடல் தளர்ந்து போவதற்கு முன்பே நம்மால் ஈட்டப் பெற்று நமக்குப் பயன் பட்டவை போக மீதம் எஞ்சியிருப்பதை இந்த உலகம் நன்மைபெற மனம் உவந்து அளியுங்கள்’’ என்ற வேண்டுகோளே கல்வெட்டுப்பாடலாக அங்கு காட்சி அளிக்கின்றது. இதுதான் அப்பாடல்:

      “ ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்

       பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய்

       தண்டால் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன்

      உண்டேல் உண்டு மிக்கது உலகமறியவைம்மினேய்”

இப்பாடல் உலகம் உள்ளளவும் மனித குலம் போற்றப் பெற வேண்டிய ஒன்றாகும்.

திருவெள்ளறை செந்தாமரைக் கண்ணன் கோயிலும், அங்கு திகழும் ஸ்வஸ்திக் கிணறும் மனித குல மாண்பினை எடுத்துக்காட்டும் ‘‘பெரிய ஸ்ரீ கோயில்’’ தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!.

திருவெள்ளறை கல்வெட்டுகள்


    60 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றாளர்கள் பலரும் அறிந்த ஓர் பாடல் கல்வெட்டு தனிசிறப்பு. (காவிரி வடகரை திருச்சி அருகு)

திருவெள்ளறை சுவத்திக் கிணறு தொடர்புடைய கல்வெட்டு.

        “உண்டு உடுக்க தனக்கு தேவையான கொண்டு மீதியை

         உலகினுக்கு ஈந்திடுக” எனும் ஓர் தத்துவப்படல் 

        “கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்

         பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய்

        தண்டால் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன்

        உண்டேல் உண்டுமிக்கது உலகமறிய வைம்மினேய் “.

திருவெள்ளறைக் கல்வெட்டு - 2 

v  திருவெள்ளறையில் காணப்படும் சுந்தர பாண்டியனது  இரு பாடல் வடிவிலான கல்வெட்டுகளில் ஒன்று.

v  “அவன் தஞ்சையையும் உறந்தையையும் வென்று சோணாடு கொண்டதையும் தன்னடி பணிந்த வளவனுக்கும் மாகதர் வேந்தனுக்கும் சோணாடு கொடுத்தருளியதையும் கூறுகிறது”.

     " தடுத்தார் கலிவென்ற கோனே தரணிக் கிறைவன் வெம்போர்

       எடுத்தார் ருளரென்னிலி யானைக் கிடுவனென் முனிந்து

       -கடுத்தாணையின்வழிக் காவிரி நாட்டினை யெல்லை செய்து

       குடுத்தான் பணித்த வளவற்கு மாகதர் கோனுக்குமேய்"

    பாண்டிய நாட்டிற்கு அடங்கிய சிற்றரசனாய் திறை செலுத்தச்  செய்துவிட்டு சோழ நாட்டினை இராஜராஜனுக்கே வழங்கி சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியனாய் அறியலானான்.

Ø  சுந்தர பாண்டியனின்  மெய்க்கீர்த்தி மாகதர்கள் அவனுக்கு திறை செலுத்தியதாகக் குறிப்பிடுகிறது.

Ø  கல்வெட்டுக் குறிப்பிடும் மாகதர்கள் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாயிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Tamil